நாகர்கோவில், செப்டம்பர் 1 –
நாகர்கோவில் வடசேரி அருகுவிளையைச் சேர்ந்த செல்வம் (44) இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். வேலைக்கு எதுவும் செல்லவில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு மது அருந்தக்கூடாது என்று எச்சரித்து உள்ளனர். ஆனால் செல்வம் தொடர்ந்து மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன் திடீரென வலிப்பு வந்து செல்வம் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செல்வம் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி இளங்காமணி (38) வடசேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


