நெல்லூர்:ஆக.26.
திருமண மண்டபங்களின் வாடகை பல லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் வகையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி சார்பில் 24 மணி நேரத்திற்கு ரூ.1 மட்டுமே வாடகையில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் திருமண மண்டபங்களில் இடத்தைப் பொறுத்து 24 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனுடன் மேடை அலங்காரம், முகப்பு அலங்காரம், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் திருமணங்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, நெல்லூர் மாநகராட்சி சார்பில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.40 கோடி செலவில் பிரம்மாண்டமான திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 5,000 பேர் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மண்டபத்தில் ஏசி அறைகள், பளிங்குத் தரைகள், விசாலமான கார் பார்க்கிங், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குறைந்த செலவில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திருமண மண்டபம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அமைச்சர் நாராயணா அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் இந்த முயற்சி ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



