ஈரோடு, ஏப். 17 –
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: மொடக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக வருகிற 19ந் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அனைத்து பெண்களும் விரும்புகின்றனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வரை முறை திட்டத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
தமிழக முதல்வர் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறி எதிர்த்து வருகிறார். அவர் மோதல் போக்கு இல்லாமல் கடமையாற்ற தவறி விட்டார். மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் திமுக மக்களை ஏமாற்றும் வேலையை செய்கிறது. உதயநிதியை முதல் அமைச்சராக ஆக்குவது தான் மு.க.ஸ்டாலினின் எண்ணம்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. இதனால் தான் அவர் சம்பந்தம் இல்லாமல் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம் பி ராமலிங்கம், டாக்டர் சி கே சரஸ்வதி எம் எல் ஏ, தெற்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில், ஊடக பிரிவு தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



