கருங்கல், ஜூலை 28 –
தமிழக கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட மத்திய அரசை கேட்டு மேல்மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு வெட்ஜ் பேங்க் எனப்படும் கடற்பரப்பில் மீன்வளம் அழியும் அபாயம் உள்ளது. மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று மீனவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மேல்மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் டன்ஸ்டன் தலைமை தாங்கினார். போராட்டக்குழு உறுப்பினர் அத்தனேசியஸ் வரவேற்று பேசினார். பங்கு பேரவை செயலர் லலிதா அறிமுக உரையாற்றினார். மேல்மிடாலம் ஜமாத் தலைவர் அகமது குஞ்சு, இந்து சமய குழுவை சார்ந்த நாகராஜன், நெய்தல் மக்கள் இயக்க பொறுப்பாளர் குறும்பனை பெர்லின், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காஸ்மிக் சுந்தர், அணுக்கனிம மக்கள் எதிர்ப்பு இயக்க தலைவர் அருளானந்த், துணைத்தலைவர் கேப்டன் ஜாண்சன், கானாவூரை சார்ந்த எட்வின்துரை ஆகியோர் பேசினர்.
மிடாலம் ஊராட்சி தலைவர் டாக்டர் விஜயகுமார், ஊராட்சி திமுக செயலாளர் தங்கதுரை, தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர், மிடாலம் ஊர் தலைவர் சிபில் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். முன்னதாக மேல்மிடாலம் ஆலயம், அந்தோனியார் குருசடி, எள்ளுவிளை போன்ற பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தையொட்டி உளவு பிரிவு, கியூ பிரிவு உட்பட ஏராளமான போலீசார் இப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.