கோவை, ஜூன் 26 –
கோவை மாவட்டம் காரமடை, ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத்தலைவர் முனைவர். சங்கமித்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கூறுகையில் நாம் பிறந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களுக்கு வேண்டும். நாம் கற்கும் கல்வி அதற்கு துணை நிற்கும். தன்னம்பிக்கை கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றிக்கனிகளை பறிக்கலாம்.
ஆசிரியர்களை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வெற்றி சிகரத்தை அடைந்து எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்தை பெற வேண்டும். சக மனிதர்களின் துன்பத்தை போக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். நாம் பேசும் தமிழ் என்பது நம் அவமானம் அல்ல. நம் அடையாளம்.
அத்தகைய மொழியின் வளர்ச்சிக்கு நாம் பாடுபடுதல் நலம் என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், துணை முதல்வர்களான முனைவர். சண்முகப்பிரியா மற்றும் முனைவர். தேவப்பிரியா, உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் சாரா, அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் முதலாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ஜெயந்தி அவர்கள் நன்றியுரை கூறினார்.