குளச்சல், ஜூன் 28 –
குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (47) முன்னாள் கவுன்சிலர். ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் உள்ளார். இவரது மனைவி சரபு நிஷா (43) இந்த தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முகமது அப்துல் காதர் பிள்ளைகளை துன்புறுத்தியதால் மனைவி சரபு நிஷா உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அவர் கணவரை பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் சென்னையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கிறார். அந்த மகளை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக மகள் மற்றும் தனது சகோதரருடன் வாடகை காரில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த தகவலை அறிந்த கணவர் முகமது அப்துல் காதர் தனது காரில் மூன்று அடியாள்களுடன் மனைவி மற்றும் மகள் சென்ற காரை பின் தொடர்ந்து துரத்தினர். ஒரு கட்டத்தில் அச்சத்தில் கார் டிரைவர் பெரியகுளம் வயல்வெளியில் உள்ள ஒற்றை வழிச்சாலை வழியாக காரை ஓட்டி சென்றார். தொடர்ந்து முகம்மது அப்துல் காதர் மனைவி மகள் சென்ற காரை சினிமா பட பாணியில் துரத்தி சென்று தனது காரால் மோதி தள்ளி அச்சுறுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் காரின் பின் பக்கம் மோதி அச்சுறுத்திய நிலையில் முஹம்மது அப்துல் காதர் சென்ற காரின் முன்பக்க டயர் திடீர் என பஞ்சரானது. இதை அடுத்து முகமது அப்துல் காதர் அடியார்களுடன் தப்பி சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சரபுநிஷா தனது மகள் அர்ஷிதா பாத்திமா உடன் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் முகமது அப்துல் காதர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பஞ்சராகி நின்ற காரை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் 4 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் கார் சேஸிங் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.