தருமபுரி, ஏப்ரல் 29 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சுற்று சுவர் பலவீனமடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் சுற்று சுவர் இடிந்து விழுந்து உள்ளது. இது குறித்து பலமுறை பெற்றோர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி காலை அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபானி – அபிராமி தம்பதியரின் 3 வயது பெண் சிறுமி தாரிகா பள்ளி நுழைவு வாயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது காம்ப்பவுன்ட் சுவரின் முன்பகுதி திடிரென்று இடிந்து சிறுமி மீது விழுந்ததில் சிறுமியன் வயிறு மற்றும் இடுப்பு பகுதி நசுங்கி உயிருக்கு போரடிய சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரிமங்கலம் தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர் பழனிமுத்து கூறுகையில்: பள்ளியின் சுற்று சுவர் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க கோரி பலமுறை ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் மனு அளித்தும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இச்சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி வேலை நாட்களில் இது போன்று நடந்திருந்தால் அதிக அளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊர் மக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.


