மார்த்தாண்டம், செப். 8 –
பளுகல் அருகே நிலவன் விளையை சேர்ந்தவர் குமாரதாஸ் (59). இவரது மனைவி ஜேனட் (53). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இளைய மகளுக்கும் அவரது கணவர் கூலி தொழிலான விஷ்வாம்பரன் (40) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விஷ்வாம்பரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் இளைய மகள் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு வந்து ஓராண்டாக தங்கி உள்ளார்.
இன்று மது போதையில் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு விஷ்வாம்பரன் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை குமாரதாஸ் விலக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்வாம்பரன் தகாத வார்த்தைகளால் மாமனாரை திட்டியதுடன் தான் வைத்திருந்த ரப்பர் பால் வெட்டும் கத்தியால் குமாரதாசை குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த குமாரதாசை குடும்பத்தினர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் மாமனாரை கத்தியால் குத்திய விஷ்வாம்பரனை கைது செய்தனர்.


