நாகர்கோவில், டிச.18-
குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் நீண்ட நாள் கோரிக்கை காரணமாகவும், கலெக்டர் தலைமையில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் குவிவதால் ஏற்படும் வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்திலும்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா விவசாயிகளுக்கு பயனுள்ள ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, மாதம்தோறும் நீர்வளத்துறையின் நான்கு உபகோட்ட அளவிலான பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பாசனத்துறை நிர்வாகிகள், நீரினைப்பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் மாதாந்திர கூட்டமும்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட அளவில் நீர்வளத்துறை கோதையாறு பொறியாளர் தலைமையில் மாவட்ட அளவிலான மேற்கூறிய துறைகளினுடைய அதிகாரிகள், பாசனத்துறை நிர்வாகிகள் கலந்து கொள்ளக்கூடிய காலாண்டு கூட்டத்தையும் கூட்டி விவாதிப்பதற்கு உத்தரவிடப்பட்டு அதன்படி கலந்த பல மாதங்களாக கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
இக்கூட்டங்கள் விவசாயிகளுக்கு தங்கள் கோரிக்கைகளை கூறி, விவாதித்து, தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதோடு, பல்வேறு துறை அதிகாரிகள் தங்களுக்குள் நேரடியாக சந்திப்பதற்கும் விவசாயிகள் முன்னிலையில் பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பதற்கும்,
பொதுவான முடிவுகளை எடுப்பதற்கும் மிகுந்த வசதியாக இருந்தது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளில் சாலைபோடுவது, பக்கச்சுவர்கள் கட்டுவது போன்ற வளர்ச்சிப்பணிகளை செய்யும்போது, நீர்நிலைகள் சேதப்படுத்தப்பட்டு , அழிக்கப்படுவதும் அதனால் விவசாயம் பாதிக்கப்படுதும் போன்ற பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வுகள் ஏற்பட்டது.
உள்ளாட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் & பாசனத்துறை நிர்வாகிகளோடு கலந்து பேசி – வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான, நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது சம்பந்தமாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த கூட்டங்களை முறையாக நடத்தாமல் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, சில அதிகாரிகள் மாதம்தோறும் கூட்டங்களை நடத்துவதில்லை. கூட்டம் நடைபெறுவது சம்பந்தமான தகவலை முறைப்படி முன்கூட்டியே அதிகாரிகளுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்காமல் இருப்பது, நடைபெறும் கூட்டங்களில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உட்பட மேற்கூறிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். பிரச்சனைகளை தீர்க்காமலும் இருந்து வருகின்றனர். நீர்வளத்துறை பொறியாளர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டிய கூட்டம் நடத்தப்படவில்லை. இதுபோன்று பல்வேறு விதமான குறைபாடுகள் நிலவி வருகிறது.
இதனால், கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகள், விவசாய பிரதிநிதிகளினுடைய பங்களிப்பும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நீர் மேலாண்மை கூட்டங்கள் இனிமேல் நடத்தப்படாமல் மாவட்ட ஆட்சியர் எடுத்த நல்ல முயற்சி தோல்வியில் முடிந்துவிடும்.
ஆகவே மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற நீர் மேலாண்மை கூட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டங்களை முறைப்படி உரிய காலத்திற்குள் நடத்த வேண்டும் என்றும், கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டு பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


