குளச்சல், மார்ச் 25 –
நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுஷானி (26). இவருக்கும் இனயம் பகுதியை சேர்ந்த ஏபர் காட் டைபன் (37) என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவர் தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்து பார்த்ததால் யுஷானியும் வெளிநாட்டில் தங்கியிருந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, யுஷானி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
இதை அடுத்து அவர் குழித்துறை கோர்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 2023ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 30 பவுன் தங்க நகையும், ரூ.5 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு கணவர் என்னை தென்னாப்பிரிக்காவில் அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகு போதை பொருட்கள் உபயோகப்படுத்தி என்னை துன்புறுத்த தொடங்கினார். மேலும் செல்போனில் ரீல்ஸ் எடுக்கவும் வற்புறுத்தினார்.
நானும் கணவரின் விருப்பப்படி ரீல்ஸ் எடுக்க சம்மதித்தேன். இதன் மூலம் வந்த பணத்தை எனக்கு தராமல் அபகரித்தார். பின்னர் மகள் பிறந்த பிறகு மேலும் ரூபாய் 10 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறினார். இதை அடுத்து அங்கிருந்து கோவாவுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்த போது அங்கு ரீல்ஸ் எடுக்க வற்புறுத்தினர். நான் சம்மதிக்காததால் அடித்து துன்புறுத்தினார். இதற்கு எனது கணவர் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர்.
மேலும் தொடர்ந்து சித்திரவதை செய்தால் குழந்தையுடன் எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். என்னுடைய நகைகள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கணவர் வீட்டில் தான் உள்ளன. கேட்ட பிறகு அவற்றை தர மறுக்கிறார்கள். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த குழித்துறை கோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா விசாரணை நடத்தி யுஷானியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


