நாகர்கோவில், மே. 12-
நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குமுறல் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குமுறல் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. பாஜகவினர் தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சி தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட கோவை நாடாளுமன்ற தொகுதியில் பணம் வினியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது மட்டுமல்லாமல் பரபரப்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வெளியாகின. இதே போல் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜகட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின், உதவியாளரிடம் ரூ. 4 கோடி சிக்கியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் நேரடியாக வேட்பாளர்கள் மூலம் தொகுதி பொறுப்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால் பாஜ போட்டியிட்ட தொகுதிகளில் பாஜ நிர்வாகிகள் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள் என தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பாஜ மேலிடத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளதோடு, வெளிப்படையாகவும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் இந்த பிரச்சினை பூதாகரமாக எழுந்து நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குமுறல் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது: காலங்காலமாக தன்னலமற்று உழைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு நான்கு கட்டமாக கட்சி வழங்கிய பணத்தை இரண்டு கட்டமும் முழுமையாக கொடுக்காமல் பணத்தை முழுமையாக ஆட்டைய போட்டவர்களை பாரதிய ஜனதா என்ன செய்ய போகிறது என அச்சடிக்கப்பட்டுள்ளது. வேறு சில மாவட்டங்களில் உள்ளது போல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் பணம் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.