1,380 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு
சேலம், செப்.02.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் சிறப்பு அரங்கில் நடைபெற்றது. கல்லூரித் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர். செந்தில்குமார் வரவேற்புரையாற்றி, பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை வழிகாட்டி கிருஷ்ணா பாலகுருநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 15 பேருக்கு முனைவர் பட்டங்களும், சிறந்த தரவரிசையில் இடம்பெற்ற 31 மாணவ, மாணவிகளுக்கும், 1,070 இளநிலை பட்டதாரிகள் மற்றும் 310 முதுநிலை பட்டதாரிகள் என மொத்தம் 1,380 பேருக்கும் பட்டங்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர், சிறப்பான கல்விச் சேவையை வழங்கி வரும் பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், சிறந்த உள்கட்டமைப்பு, மாணவர்களின் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி சிறந்து விளங்குவதாலேயே பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச தரத்தில் செயல்பட்டு வரும் இக்கல்லூரியின் மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் தனித்துவத்துடன் செயல்பட்டு கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
சோனா கல்விக் குழுமத் தலைவர் வள்ளியப்பா பேசுகையில், சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது திறன்களை நாள்தோறும் மேம்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



