சுசீந்திரம், செப். 30 –
அகஸ்தீஸ்வரம் வட்டாரம் தேரூர் கிராமத்திலிலுள்ள படிப்பகத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத் தலைமையுரையில், ‘நெற்பயிரில் வால் நெல் களை வயலுக்கு வயல் பரவும் தன்மை குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள், ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் உழவர் நல பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தோட்டக்கலை உதவி அலுவலர் தர்மராஜ் நடப்பாண்டில் தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து தெரிவித்தார். பேச்சிப்பாறை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் இராஜ் பிரவிண் பசுந்தாள் உரப்பயிரிடுவதன் முக்கியத்துவம், அதன் நன்மைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். கால்நடை உதவி மருத்துவர் அருள் பிரசாத் கால்நடைத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் கால்நடைகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.
பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் மீனாகுமரி பட்டு வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள், மல்பெரி செடி நடவு முறைகள், பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் குறித்து தெளிவுரை வழங்கினார். ஒழுங்குமுறை விற்பனை கூடம் மேற்பார்வையாளர் ஜெரால்டு லோபின் நடப்பாண்டு வேளாண் வணிகத் திட்டங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைப்பொருட்களுக்கு வழங்கப்படும் பொருளீட்டு கடன், சேமிப்பு கிடங்கு வசதிகள், மற்றும் வேளாண் கட்டமைப்பு நிதி மானியம் குறித்து எடுத்துரைத்தார். இம்முகாமில் தேரூர் வருவாய் கிராமத்தை சார்ந்த முன்னோடி விவசாயிகள் சண்முகம் பிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை, சிவசுப்பிரமணியன், நாகரு பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.



