தேனி, மே 6 –
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.
புத்தக அறிவோடு, தனித்திறன்களை கற்றுத்தருவதன் மூலம் மாணவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றலாம். அதனடிப்படையில் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையினை புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக மாற்றுவது மிகவும் அவசியம். மாணவர்களின் விருப்பம் மற்றும் தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற முகாம்களில் மாணவர்கள் கலந்து கொள்வதன் மூலம் தங்களின் திறமைகளை வெளிகாட்டவும், விடுமுறை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும் பயனுள்ளதாக அமையும். இம்முகாமில் ஓவியப்பயிற்சி, சிலம்பம், சதுரங்கம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் நாற்றங்கால் வளர்ப்பு முறை ஆகியவைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இம்முகாம் இன்று (06.05.2026) முதல் தொடர்ச்சியாக 20 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முகாமினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் நாகேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணு பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (மகளிர் அதிகார மையம்) சாருமதி மற்றும் முகாம் பயிற்சியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



