நாகர்கோவில், ஜூன் 24 –
கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் தேசிய அளவில் ஐஸ் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு, 2ம் இடம் பெற்ற பள்ளி மாணவனை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜூன் 15 முதல் ஜூன் 18 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்ட மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த ஆண்டு தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போட்டியின் தமிழ்நாடு அணியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மரியாகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர் எஸ்.ஆஷிக் கலந்து கொண்டு விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இளம் வயதிலேயே பனிச்சறுக்கு விளையாட்டான ஐஸ் ஹாக்கியில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர் ஆஷிக்குக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று நமது நாட்டிற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



