தூத்துக்குடி, ஜூலை 1 –
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசும்போது, கடந்த 3 ஆண்டு காலத்தில் சாலைப் பணிகள், பூங்கா பணிகள், உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாகுபாடின்றி நிறைவேற்றப்பட்டது.
தற்போது 925 சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைக்கு அதிகமாக குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3-வது மைல் மேம்பாலம் தடுப்பு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. தினசரி 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாலத்தை கடந்து செல்வதால் இதில் புதிய பாலம் அமைக்க வேண்டும் இல்லை என்றால் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தின் உறுதித் தன்மை பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்திற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி வேண்டியும், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு இரவு உணவு திட்டத்தில் கூடுதல் செலவுகளுக்கு மன்றத்தின் அனுமதி கோரியும், நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு நிதி ஒதுக்க அனுமதி வேண்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உதவி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகர் நல அலுவலர் சரோஜா, மாநகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன் மண்டல ஆணையாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், கல்யாண சுந்தரம், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டு ராஜா, பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ் மற்றும் மாமன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



