மார்த்தாண்டம், ஜூலை 29 –
திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கொடுதுறை, மணலிக்காடு மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடி தெரிவிக்கையில்: பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கொடுதுறை, மணலிக்காடு பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக அந்தப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் மேற்குறிப்பிட்ட கிராமங்களை சார்ந்த பழங்குடியின மக்கள் தங்களுக்கு வன உரிமை பட்டா, புதிய வீடுகள், மின்சாரம், குடிநீர், பேருந்து வசதி, மருத்துவ வசதி, மருத்துவகாப்பீடு, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்கள், வட்டாட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வன உரிமை சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களுக்கான தனி மனித உரிமைப் பட்டா வழங்கிடுவது தொடர்பாக கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வன உரிமைக் குழு மற்றும் கிராம சபாக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து வன கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களிடமிருந்து விவசாய நிலத்திற்கான நில உரிமைப் பட்டாவிற்கான முறையீடுகளை பெற்று கூராய்வு செய்து கிராம சபா தீர்மானம் நிறைவேற்றி கோட்ட அளவிலான குழுவிற்கு விரைவில் அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வன உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தனி மனித உரிமை பட்டா நிலங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டங்களின் கீழ் வீடு கட்டுவதற்கான அஸ்திவார பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வீடு கட்டும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு பயனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தி கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர், தனி வட்டாட்சியர், வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.