திருப்பூர், ஏப். 27 –
கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கடந்த ஒருவாரமாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த வெயிலின் தாக்கம் காரணமாக உடலின் வெப்ப நிலை அதிகமாக உயருவது, வியர்வை வராமல் தோல் வறண்டு சிவந்து போவது, கடுமையான தலைவலி மற்றும் மயக்கம், குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல், இதயத்துடிப்பு அல்லது பேச்சு உளறல் போன்ற அறிகுறி ஏற்படும் என டாக்டர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 படுக்கைகளுடன் கூடிய வெப்ப அலை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: வெயிலின் கொடுமையால் மக்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம், சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அவ்வாறு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தனிப்பிரிவு
உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு தடையற்ற ஆக்சிஜன் வசதி, குளுக்கோஸ் ஏற்றும் வசதி, தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. வெப்ப அலை காற்று வீசுவதால் அதிக வியர்வை ஏற்ப டும்போது
தோல் மூலம் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கிட்னி பாதிக்கப்படும்.
அடுத்தகட்டமாக இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை தவிர்க்க மதியம் வெயிலில் செல்லாமல் 12 மணி முதல் மாலை 4 வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மெல்லிய, உலர் ஆடைகள் அணியலாம். வெள்ளை நிற பருத்தி ஆடைகளை ஆடைகளை அணியலாம் கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது குடை, தொப்பி அல்லது தலைக்கவசம் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
கண்களுக்கு தரமான குளிர் கண்ணாடி அணியலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், தர்பூசணி, மோர், கம்பங் கூழ் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும். மயக்கம் அல்லது அதீத சோர்வு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும். மயக்கமடைந்தவர்களை குளிர்ந்த இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.



