தருமபுரி, ஜூலை 28 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் 20,000 இடைநிலை ஆசிரியருக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டி தமிழக முதல்வரை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயத்தப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெரும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. 1.6.2009 க்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் என வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இரு வேறு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. தேர்தல் வாக்குறுதியிலும் அதை கூறியது. ஆனால் நான்காண்டுகள் கடந்தும் அதனை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
இதனை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்த போதும் கடந்த நான்காண்டு காலமாக இதுவரை எதுவும் செய்யவில்லை. பலர் ஓய்வு பெற்று விட்டனர். பலர் பணியை 16 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்களாகவே பணிபுரிந்து வருகிறார்கள். ஆகவே திமுக அரசு தேர்தல் அறிக்கை கூறியுள்ளபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் பலன் கிடைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.