தஞ்சாவூர், ஜூலை 3 –
தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். செங்கிப்பட்டி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட விபி-ஜி ராம்ஜி திட்டத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் சிப்காட் வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பார்வையிட்டு அவ்வப்போது பெய்து வரும் மழையிலிருந்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கவும், மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் வழிகள் அமைப்புகளை மேம்படுத்திடவும் அறிவுறுத்தினார். பின்னர் செங்கிப்பட்டி ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளியில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து செங்கிப்பட்டி கால்நடை மருந்தகம் மற்றும் மகாத்மா காந்தி நெஞ்சக மருத்துவமனை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் புதிய நியாய விலை கடைகளில் கட்டுமான பணி, உயர்மட்ட நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



