தஞ்சாவூர், ஜூலை 9 –
தஞ்சாவூர் மாநகரில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகனம் நிறுத்துமிடம் குறித்து கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான நாட் களை விட பல மடங்கு அதிகரித்து வருகிறது. இவர்கள் கார், வேன்கள் பஸ்களில் வருவதால் பெரிய கோவிலுக்கு எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடம் நிரம்பி விடுவதால் பழைய கோர்ட் சாலை, மருத்துக் கல்லூரி சாலை, சீனிவாசபுரம், இராச மிராசுதார்அரசு மருத்துவ மனை சாலையோரங்களில் கார்கள், வேன்கள், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
மேலும் தஞ்சாவூர் பெரிய கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படி நெரிசல் ஏற்படும்போது பஸ்கள் பழைய கோர்ட்டு சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் பெரிய கோவில் சாலை மட்டுமின்றி காந்திஜி சாலை, பழைய கோர்ட்டு சாலையும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தஞ்சாவூர் மாநகரில் முக்கியமான பகுதிகளான பழைய பஸ் நிலையம், தஞ்சாவூர் பெரிய கோவில், காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான இடங்களில் புதிய ரவுண்டாக்களை உருவாக்கவும் போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தவும் புதிய முயற்சியாக ஒரு வழிப்பாதைகளை உருவாக்கவும், தேவையான இடங்களில் வாகன நிறுத்தும் இடங்களை மேம்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகம், சோழன் சிலை, ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் ரேவதி போக்குவரத்து துறை, போலீஸ் துறை, மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் கீதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.



