சேலம், ஜூன் 17 –
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் மாவேலி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவர் தான் விவசாய கூலி வேலை செய்து ஜீவனம் செய்து வருகிறார். அவருக்கு பூதப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் திருமணம் ஆகி 12 வருடம் ஆகிறது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவருடைய கணவர் அவரது மூத்த மகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதால் சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை எண்: 37/2025 பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேற்படி வழக்கு போக்சோ 2012 பிரிவு 9 (m)(n) 10 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கணவரை பிரிந்து தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் அவரது கணவருக்கு போதை பழக்கமும், ரவுடிகளின் சகவாசமும் உள்ளது. ஒரு முறை கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். மேலும் தனது மூத்த மகள் பள்ளி செல்லும் இடங்களில் சந்தித்து நீதிமன்றத்தில் ஏதாவது அவரைப் பற்றி சொன்னால் மகளை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார்.
மேலும் அவர் வசிக்கும் வீட்டிற்கு வந்து கற்களை எடுத்து வீட்டின் மீது கல் எரிந்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், மரியாதையாக கேசை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உன் உடம்பில் தலை இருக்காது என்று மிரட்டுகிறார். இதனால் தன்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதனால் பலமுறை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் என அனைவரிடமும் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே மாவட்ட ஆட்சியரை பார்த்து தனது நிலையை விளக்கி இந்த சூழ்நிலையில் இருந்து தனது கணவர் ஆறுமுகம் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரது குடும்பத்தை காப்பாற்றுமாறு மனு அளிக்க வந்தார். விசாரணைக்காக அவர்களை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.



