சேலம், ஜூலை 2 –
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 69-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் சோனா கல்வி நிறுவனங்கள் – கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்து நிகழ்ச்சி 02.07.2026 (வியாழக்கிழமை) காலை 10.35 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளியப்பா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை விருந்தினராக சேலம் TANGEDCO நிறுவனத்தின் மேற்பார்வைப் பொறியாளர் டாக்டர் N. குணவர்த்தினி கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். கௌரவ விருந்தினராக சென்னை Ford India Limited நிறுவனத்தின் Manufacturing Engineering துறைத் தலைவர் டி.மனோகரன் பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். தலைவர் சி.வள்ளியப்பா தனது தலைமையுரையில், கடந்த 69 ஆண்டுகளாக ஒழுக்கத்துடன் கூடிய தரமான தொழிற்கல்வியை இக்கல்லூரி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறந்த தொழில்முனைவோர்களாகவும், முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரியில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி கல்வியிலும், திறன்களிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.
கல்லூரியின் துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தொடர்ந்து அறிந்து கொண்டு, தங்களது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா மாணவர்கள் தொழில்துறை சார்ந்த (Industry-related) திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும், Start-up நடவடிக்கைகள் மூலம் இளம் தொழில்முனைவோர்களாக உருவாக முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கல்லூரியின் இயக்குநர் டாக்டர் வி. கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ஏ. கனகராஜ் தனது உரையில், கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, புதுமையான கற்றல் முறைகள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெற்றுள்ள விருதுகள், மாணவர்களின் சாதனைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரியில் வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் சோனா கல்வி நிறுவனங்கள் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் UPSC, TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தரமான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களை ஊக்குவித்தனர். இவ்விழாவில் 2,000-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



