சேலம், ஆக. 24:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 503 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் ஒரே கோரிக்கைக்காக மீண்டும் மீண்டும் மனு அளிக்கும் நிலை ஏற்படாத வகையில் உரிய தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக் கடன் மானியத் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.2,91,667 மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 8 பேருக்கு சுயதொழில் தொடங்கவும், 2 பேருக்கு ஆவின் பால் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யவும் உதவிகள் வழங்கப்பட்டன.



