மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் இரங்கல்
ஈரோடு, செப்.12:
தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் தமிழ் மொழியையும், தமிழ் உணர்வையும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அயராத உழைப்பாலும் தொடர் பயணங்களாலும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் தமிழை உரக்க ஒலிக்கச் செய்த தமிழறிஞர், சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.
90 வயதிலும் எவ்விதத் தொய்வுமின்றி தமிழ் பணியில் தொடர்ந்து இயங்கி வந்த அவரது மறைவு தமிழுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் சிந்தனைப் பேரவையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பேரவையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர் சாலமன் பாப்பையா.
மேலும், மக்கள் சிந்தனைப் பேரவையின் மதுரை மாவட்ட நெறியாளராகவும் பணியாற்றிய தகைசால் தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.



