நாகர்கோவில், ஜூலை 2 –
கோதையாற்றின் பகுதியான களியல், செங்கொடிகரை மற்றும் தோட்டாவரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முதலை வந்து நடமாடியதாக தகவல் வெளியானது. குடிநீர் உறைகினற்றின் மீது முதலை அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாகி, அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி மீண்டும் ஆற்றின் நடுவே இருக்கும் அதே உறை கிணற்றின் மீது முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
முதலை நடமாட்டம் இருந்த உறை கிணறு அருகே இரும்பு கூண்டு அமைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் அந்த கூண்டில் முதலை சிக்கவில்லை. வனத்துறையினர் கூண்டு வைத்ததிலிருந்து அந்த பக்கம் முதலை வரவில்லை. அந்த முதலை கோதையற்றில் வேறு பகுதியை சென்று விட்டது. இதை தொடர்ந்து முதலையை பிடிக்க சென்னையில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் குமரி மாவட்டம் வந்தனர்.
அவர்கள் கோதை ஆறு பகுதிக்கு சென்று வனத்துறை உதவியுடன் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முதலை தென்பட்ட உறை கிணறு பகுதியையும் அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டையும் பார்வையிட்டனர். விவரங்களை சேகரித்த ஆராய்ச்சியாளர்கள் உறை கிணறு அருகே வைக்கப்பட்டுள்ள இரும்பு கூண்டை மூங்கில் மரங்கள் அடர்ந்த பகுதியில் தற்போது மாற்றி வைக்க அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி கூண்டு அங்கிருந்து மாற்றப்பட்டு மூங்கில் மரங்கள் நிறைந்த பகுதியில் வைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


