வேலூர், ஆக. 28:
அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்துடன், விஐடி பல்கலைக்கழகம் இரட்டை பட்டப்படிப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை விஐடி பெற்றுள்ளது.
நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் பினாய ஸ்ரீகாந்த பிரதான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்கள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்புத் துறை டீன் செனட்டர் சுலைமன் கச்சானி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே கல்வி சார்ந்த சர்வதேச ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்கள் சர்வதேச அளவிலான கல்விச் சூழலை அனுபவிக்கும் வகையில் இரட்டை பட்டப்படிப்பு மற்றும் சர்வதேச கற்றல் வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து விஐடி நிறுவனரும் வேந்தருமான கோ. விசுவநாதன் கூறுகையில், உலகத் தரத்திற்கு இணையான கல்வியை வழங்குவதில் விஐடியின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரட்டை பட்டப்படிப்புத் திட்டத்தை வழங்கும் முதல் இந்தியப் பல்கலைக்கழகம் என்ற சிறப்பைப் பெறுவது பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களுக்கு சர்வதேச கல்வி அனுபவம், புதிய கற்றல் வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பயிலும் சூழல் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என விஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், சர்வதேச உறவுகள் இயக்குநர் ஆர். சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



