மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 –
குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு 100-வது பொருட்காட்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த பொருட்காட்சியில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி, கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பின்பு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொருட்காட்சி திடலில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்து மார்த்தாண்டம் டிஎஸ்பி அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: குழித்துறை நகராட்சி சார்பில் நடைபெற்ற 100-வது வாவு பலி பொருட்காட்சி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 20 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் இந்த பொருட்காட்சி பாதுகாப்புக்கு போலீஸ் துறை சார்பில் பணம் கேட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசு ஆணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டண தொகையை சம்பந்தப்பட்ட துறைகள் அரசு கணக்கில் செலுத்தி வருகிறது. மத்திய அரசு நிறுவனங்கள், அணைக்கட்டுகள் மற்றும் மின் தயாரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை சம்பந்தப்பட்ட துறைகள் அரசு கணக்கில் செலுத்தி இருக்கிறது. வாவுபலி பொருட்காட்சி முன்னிட்டு தனியாரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை அலுவலக கணக்கில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி பணம் செலுத்தாத போதும் குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலன் கருதி தினசரி 20 காவலர்களை நியமித்து சட்ட ஒழுங்கு பேணியும், போக்குவரத்து சீர்படுத்தியும், திருட்டு சம்பவங்களை நடைபெறாமலும் கண்காணிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து, எந்தவித அசம்பாவிதமும் இன்றி பொருட்காட்சி முடிவடைந்தது என்ற விபரத்தை காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.