இரணியல், நவ. 28 –
வெள்ளாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (79). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர் ஆளூர் மேலத்தெருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மாலை அருகே உள்ள ஆலங்குளத்தில் குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகி வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த மருமகன் மற்றும் உறவினர்கள் குளக்கரையில் தேடி சென்ற போது அங்கு கரையில் வேஷ்டி பக்கெட் சோப்பு மட்டும் இருந்தது. இதனால் சந்தேகம் வலுவான நிலையில் தேடி பலன் இல்லாத நிலையில் இது குறித்து இரணியல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசார் தகவல் அளித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர் மகள் சுனிதா அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


