நாகர்கோவில், ஏப். 8 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர்கள், மாநகர் நகர்நல அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் அவர் மருத்துவர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: குமரியில் வாக்குப்பதிவு நாள் அன்று தற்போது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் குளோரின் கலந்த தண்ணீரை குடிநீர் தொட்டிகளில் நிரம்பி வழங்கப்படுவதை மாநகர நகரநல அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வாக்குச்சாவடி மையங்களின் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் முழு சுகாதாரத்துடனும் வைத்துக்கொள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
அவசர கால மருத்துவ முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டுமென கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் (பொ) ரவிக்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



