கிருஷ்ணகிரி, ஜூலை 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், அந்தேரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரப்பட்டி கிராமத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் இன்று காலை சாமல்பட்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மத்தூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
கொக்கரப்பட்டி கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் ஸ்டார்டர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அவற்றை பழுது நீக்க எடுத்துச் சென்ற ஊராட்சி செயலாளர் இதுவரை திருப்பி வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கே தங்களை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடச் செய்ததாக அவர்கள் கூறினர்.



