கருங்கல், செப். 3 –
மிடாலத்திலிருந்து நேற்று இரவு நாகர்கோவிலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸை கருங்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் (52) என்பவர் ஓட்டி சென்றார். தெருகடை பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய ஒரு நபர் போதையில் பஸ்ஸுக்குள் புலம்பியவாறும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இருந்தார். இதனால் பஸ் டிரைவர் ராஜகுமார் பஸ்சை பாதியில் நிறுத்தி அந்த நபரை கண்டித்தார்.
பின்னர் கருங்கல் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏறி இறங்குவதற்காக பஸ் நின்றது. அந்த சமயத்தில் போதை ஆசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டிரைவர் ராஜ்குமார் முதுகில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் வேதனையில் துடித்தார். மற்ற பயணிகள் கத்தியால் குத்தியவரை மடக்கி பிடித்தனர். டிரைவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிடிபட்ட நபரை கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கருங்கல் முள்ளங்கினா விளை பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


