நாகர்கோவில், பிப். 17 –
கன்னியாகுமரி மாவட்ட மீனவ மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி 50 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய விரிவான தேர்தல் அறிக்கை நேற்று தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர். அதில் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக கடல் தொழில் செய்து வரும் மீனவர்களை மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்க மத்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய கடற்கரையை எல்லையாக கொண்டு சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 1979 ஆம் ஆண்டு வரை இருந்த போல கடற்கரை கிராமங்களை பேரூராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைப்பதை தவிர்த்து, மீண்டும் தனித்தனி ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்.
கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவர்களை மீட்க்க செயற்கைக்கோள் வசதியுடன் கூடிய கடல் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மீட்பு தளங்களை உடனடியாக அமைக்க வேண்டும், கேரள பாணியில் பிரத்தியேக மீனவர் மீட்பு குழுக்களை உருவாக்க வேண்டும். நடுக்கடலில் பழுதாகும் படகுகளை மீட்க அரசு சார்பில் இழுவை படகு வசதி செய்து தர வேண்டும். குமரி மாவட்டத்தில் கதிர்வீச்சு பாதிப்பால் புற்றுநோய் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரத்தில் உள்ளது போன்ற நவீன புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை குமரியில் அமைக்க வேண்டும்.
கதிர்வீச்சு மற்றும் கடல் அரிப்பு காரணமாக மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை அப்புறப்படுத்த வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கும் நீல பொருளாதாரத் திட்டம் மற்றும் சாகர்மாலா திட்டங்களை கைவிட வேண்டும். ஆழ் கடலில் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகளை ரத்து செய்து, பாரம்பரிய மீனவர்களின் கடற்பரப்பு உரிமையை உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.



