கன்னியாகுமரி, நவ. 1 –
பகவதி கன்னியாகுமரி அம்மன் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை ஏற்று குமரி மாவட்ட திருக்கோவில்களின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பயனாக சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.21 கோடியே 95 லட்சம் செலவில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ராஜகோபுரம் கட்டுவதற்கான நிதியை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்கு வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்தநிலையில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் அமைந்திருக்கும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குட்பட்ட பகுதிக்குள் வருவதால் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் தடையில்லா சான்று மற்றும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் தடையில்லா சான்று பெறுவதற்கான கன்சல்டண்ட் நிறுவன மாக சென்னையில் உள்ள எக்கோ சர்வீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற என்ற நிறுவனத்துக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வல்லுநர் குழு நேற்று முன்தினம் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் தடையில்லா சான்று மற்றும் முன் அனுமதி பெறுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த வல்லுநர் குழு கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் கோவிலின் வடக்கு புரதான நுழைவு வாசல் மற்றும் ஏற்கனவே ராஜகோபுரம் கட்டுவதற்காக வேலை தொடங்கி அஸ்திவாரத்தோடு நின்றுபோன இடம் கிழக்கு வாசல், கோவிலின் உள்பிரகாரம், வெளிப்புறம் மற்றும் மேல் தளம் ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட திருக்கோவில்களின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்ட னர். கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதினால் காற்று மாசு, தண்ணீர் மாசு, மண் மாசு, சத்தம் மாசு போன்ற சுற்றுச்சூழல் மாசுக்கள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவான ஆய்வு அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவதற்கான பணியை சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்துக்கு தமிழக இந்து அறநிலையத்துறை வழங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு ஆய்வுகூட வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதனால் மாசு ஏற்படுமா? என்பது குறித் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயார் செய்து இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் கடலோர ஒழுங்கு மண்டலத்தின் தடையில்லா சான்று மற்றும் அனுமதி பெற்று ராஜகோபுரம் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.



