திட்டுவிளை, ஜூன் 30 –
வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்டி விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று பேசியதை எதிர்த்து அந்த கூட்டத்திலே கடலில் கலக்கும் தண்ணீர் வீணானதல்ல என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கருத்து தெரிவித்தார்.
திட்டுவிளையில் நடந்த விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு குறும்பனை பெர்லின் பேசும்போது மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நில மலைவாழ் மக்களும் காடும் காடுசார்ந்த முல்லை நில காட்டுவாசிகளும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில கடலோடிகளும் வயலும் வயல் சார்ந்த மருத நில விவசாய மக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால் தான் மத்திய மாநில அரசுகளும் கார்ப்பரேட் கம்பெனிகளும் நம்மை பிரித்தாண்டு அவர்கள் நினைப்பதைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மலைமக்களும் கடல் மக்களும் விவசாயிகளும் காட்டுவாசிகளும் எப்போது இணைந்து நின்று தோழமை உணர்வுடன் குரல் கொடுப்போமோ அப்போதுதான் நமது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும். மீனவ மக்கள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்காகவும் களம் நின்று குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறோம். நமது ஒற்றுமையை நாளைய வரலாறு பேசும்படி செய்வோம்.
அதே வேளையில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்டவேண்டும் என்று இங்கு பேசியவர் கூறினார். கடலில் கலக்கும் தண்ணீரெல்லாம் வீணானவையா? கடலில் தண்ணீர் கலப்பது இயற்கை சுற்றுச்சூழலை சமன்படுத்தச் செய்யும் அரிய பணி. கடலில் ஒரு சூழலியல் மாற்றம் நிகழ்ந்தால் அது விவசாய நிலத்தை நேரடியாகப் பாதிக்கும். தடுப்பணை கட்டவேண்டும்; தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கடலில் தண்ணீர் கலக்கவில்லையென்றால் உயிர்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
எனவே வீணாக கடலில் தண்ணீர் கலக்கிறது என்ற வாதத்தை முன்வைக்காதீர்கள் என்று பேசினார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்புரையாற்றினார்.