நாகர்கோவில், ஜூன் 15 –
நாகர்கோவில் மாநகராட்சியின் நுழைவு பகுதியாக ஒழுகினசேரி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் வரவேண்டும். ஒழுகினசேரி சந்திப்பில் பழையாற்றில் நெடுஞ்சாலை துறை மேம்பாலமும், அதன் அருகில் ரயில்வே பாலமும் அமைந்துள்ளது.
தற்போது கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் நடப்பதால் ஒழுகினசேரி பகுதியில் பழைய ரயில் பாலம் இடிக்கப்பட்டது. புதிய பாலம் அமைத்து சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு அடையவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே புதிய பல பணியை விரைந்து முடித்து போக்குவரத்தை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
புதிய பால பணி தற்போது 60 சதவீதம் வரை பணி முடிவடைந்துள்ளது. 40 சதவீதப் பணிகள் இணைப்பு சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். இதற்கு போக்குவரத்தை மாற்றி அமைக்க அமைப்பதற்காக சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே ஒழுகினசேரி சந்திப்பு வரும் வாகனங்களை மாற்றிவிட்டு பாலத்தின் பக்கவாட்டு பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.
இதற்கிடையே ஒழுகினசேரி சந்திப்பில் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் ரயில்வே கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை அகற்றினால் ஓரளவு நெருக்கடி சமாளிக்கும் வகையில் தற்காலிக பாதை அமைக்க முடியும் என காவல்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து ரயில்வேக்கு கோரிக்கை வைத்தார். ரயில்வே அதிகாரிகள் கட்டிடத்தை இடிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர். இது தொடர்பாக கடிதம் அளித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு பல ஆண்டுகளாக இருந்த ரயில்வே கட்டம் அகற்றப்பட்டது. இந்த கட்டிடம் ஒரு காலத்தில் ரயில்வே குடியிருப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. கட்டிடம் அகற்றப்பட்டதால் உடனடி தற்காலிக சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


