ஈரோடு, ஜூன் 30 –
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் இயங்கி வரும் நியாயக்கடைகளில் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட
தலைவர் மேசப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து பொருளாளர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் மதியழகன், செந்தில்குமார், இணை செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ரேஷன் கடைகளில் தற்போது ப்ளூடூத் மூலம் மின்னணு எடை தராசு அமைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருட்கள் வினியோகம் செய்ய குறைந்தபட்சம் 8 நிமிடத்தில் இருந்து நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் வினியோகம் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுவதுடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்கும் பொருட்டு ப்ளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்த வேண்டும்.
நுகர் பொருள் வாணிகக் கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி இரண்டு கிலோ முதல் ஐந்து கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை துவரம் பருப்பு கோதுமை ஆகிய பொருட்கள் ஒரு கிலோ முதல் ரெண்டு கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.