ஈரோடு, ஜூலை 27 –
ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் பகுதியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கல் குவாரி மற்றும் கல் உடைக்கும் கிரஷர் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ஏற்கனவே கடந்த 26.05.2025 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதே கோரிக்கையுடன் மனு அளிக்கப்பட்டதாகவும், அப்போது 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்களும் தற்போதைய மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மனுவிற்கு பிறகு சில காலம் கல் குவாரி மற்றும் கிரஷர் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் பணிகளைத் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கிரஷர் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விவசாய நிலங்களாக உள்ளதாகவும், அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதால், குவாரி மற்றும் கிரஷர் செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கிரஷர் அமைக்கப்படவுள்ள இடத்தை ஒட்டிய பகுதியில் சுமார் ஐந்து குடியிருப்புகள் உள்ளதால், தூசி, சத்தம் உள்ளிட்ட மாசுபாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெத்தாம்பாளையம் பகுதியில் கல் குவாரி மற்றும் கிரஷர் பணிகளுக்கு அனுமதி வழங்காமல், திட்டத்தை முழுமையாக நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.



