ஈரோடு, ஜூன் 25 –
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 2026 2027 கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா அறக்கட்டளை தலைவர் தேவராஜன் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. விழாவில், தாளாளர் சச்சிதானந்தன் வரவேற்றார். அறக்கட்டளையின் உபதலைவர் மருத்துவர் குமாரசுவாமி தலைமையுரை வழங்கினார்.
கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சுவாமி நாராயணானந்த மஹராஜ் அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் வருங்கால வாழ்க்கை நல்லவாழ்க்கையாக அமைய அருளாசி வழங்கி பண்பு, பக்தி, படிப்பு இம்மூன்றும் உங்களை உயர்த்தும் அதனால் புத்தகங்களை அன்றாடம் வாசித்து வாழ்க்கையை உயர்த்தவேண்டும் என்றும் குறிக்கோளை அடையும் வரை அயராது உழையுங்கள் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உரை வழங்கினார். மாணவர்கள் ஏட்டுக்கல்வியைத் தாண்டி நடைமுறை வாழ்வியலையும் கற்றுத் தேர்ந்து சிகரம் தொட வேண்டும்; உயர்வான சிந்தனைகளே உங்களை உயர்த்தும் என்றும் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனித் திறமைகள் உள்ளன அதனால் யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள்; வாழ்க்கை தனித்துவமானது சமூகத்தோடு சேர்ந்து உயர்ந்து நில்லுங்கள் என்றும் தன்னம்பிக்கை சார்ந்த பல்வேறு எழுச்சியூட்டும் சிந்தனைகளோடு எடுத்துரைத்து மாணவரையும் பெற்றோரையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாகப் பேசினார். கல்லூரி இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 100% தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
இவ்விழாவில் அறக்கட்டளையின் உபதலைவர்கள் இளங்கோ, வெங்கடாசலம், இணைச் செயலாளர் தங்கவேல், பாரம்பரிய பாதுகாவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கொங்கு கலை அறிவியல்ழ கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் கல்லூரியில் மாணவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று பேசினார். முடிவில் வணிகவியல் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறைத்தலைவர் முனைவர் அழகு அப்பன் நன்றி கூறினார்.



