ஈரோடு, ஜூலை 20 –
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சியில் இன்று மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் கவுன்சிலர், அரச்சலூர் பேரூராட்சி துணை தலைவர் துளசி மணி சக்திவேல் பேரூராட்சி செயல் அலுவலரிடம் முக்கிய சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.
கடந்த 04.03.2026 அன்று நடைபெற்ற வேண்டிய மன்றக் கூட்டத்தின் போது, தலைவர் விஜயகுமார் மற்றும் பிற கவுன்சிலர்கள் தன்னைத் தாக்க முயன்றதாகவும், இதனால் தான் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்றைய கூட்டம் நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்றைய தினம் மன்றக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் செயல் அலுவலர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நாளில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டதாக மினிட் நோட்டில் (Minutes Book) பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த செயல் அலுவலர், “மன்றக் கூட்டத்தை நடத்துவதும், ரத்து செய்வதும் தலைவர் சார்ந்த விஷயம்; இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” எனக் கூறியதாகத் தெரிகிறது.
செயல் அலுவலரின் இந்த அலட்சியமான பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கவுன்சிலர், “எனக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை அரச்சலூர் பேரூராட்சி அலுவலக வளாகத்திலேயே எனது உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்வேன்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



