நாகர்கோவில், ஜூலை 13 –
ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுதன் மனைவி மாலினி (24). இவர்கள் தற்போது நங்கூரன் பிலாவிளை பகுதியில் வசித்து வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து மாலினி தன தாய் ராஜத்திடம் இடம் கூறி வந்துள்ளார். அவரும் தனது மகளை சமாதானம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலினி தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். மகள் வீட்டுக்கு வந்த ராஜம் இருவரையும் சமாதானம் செய்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென படுக்கை அறைக்கு சென்ற மாலினி கதவை உட்பக்கமாக பூட்டி கொண்டார். சுதன் மனைவியை பலமுறை அழைத்தும் கதவை திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாலினி மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராஜம் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


