நாகர்கோவில், ஜூலை 1 –
மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் ஜூலை 1ம் (இன்று) தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என கல்வித்துறை அறிவித்திருந்தது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கடிதம் எழுதி இருந்தார்.
மாணவர்களின் உடல் ஆரோக்கியம், கற்றல் திறனை மேம்படுத்த போதிய அளவு தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும், அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும். இதற்காக வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியே செல்லாமல் இருக்கும் இடத்திலேயே தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வகுப்பு சூழல் பாதிக்கப்படாத வகையில் 3 நிமிடங்கள் மாணவர்கள் தண்ணீர் குடிக்க அனுமதி வழங்கலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை குடிநீர் பாட்டில்கள் எடுத்துவர அறிவுறுத்த வேண்டும். தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று காலை 11 மணிக்கு வாட்டர் பெல் அடித்து மாணவ, மாணவிகளை தண்ணீர் குடிக்க செய்தனர்.