கிருஷ்ணகிரி, நவ. 12 –
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மருத்துவர்கள் கூறும் போது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களை புதியதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள பணியிடங்களுக்கு புதிய மருத்துவர்களை நியமிக்காமல் பயிற்சியில் உள்ள மருத்துவர்களை நியமிப்பது கண்டனத்துக்குரியது. இதனால் நோயாளிகள் பாதிக்கபடுவர்.
மருத்துவர்களுக்கு பணி சுமை அதிகரிப்பு. காலிப்பணியிடங்கள் அப்படியே தொடரும். இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தமிழகம் முழுவதும் மாற்றப்பட உள்ள 450 மருத்துவர்களை மீண்டும் அதே இடங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மேலும்., பயிற்சி மருத்துவர்களை கொண்டு சீனியர் பணியிடங்களை நிரப்ப கூடாது. ஜெய்கா திட்டத்தின் கீழ் பல நூறு கோடிகளில் சென்னை, கோயமுத்தூர், சேலம், திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கட்டிடங்களில் துறைகளை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணியிடமும் இதுவரையில் உருவாக்கப்படாமல் உள்ளது.
அதேபோன்று வேலூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் துவக்கப்பட்டுள்ளன. இங்கும் இந்த மருத்துவமனைகளை நிர்வாகிப்பதற்கு எந்த ஒரு மருத்துவப் பணியிடமோ செவிலியர் பணியிடமோ, பணியாளர்கள் பணியிடமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அதேபோன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும், பெரியார் நகர் மருத்துவமனையிலும் எந்த ஒரு பணியிடங்களும் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு இங்கு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதே போன்று எந்த ஒரு புதிய பணியிடங்களும் உருவாக்கப்படாமல் புதிய மருத்துவமனைகள் துவக்கப்படுவதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது என்று கூறினர்.



