சூரம்பட்டி, ஆக 12 –
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேசியதாவது: திமுகவில் இப்போது புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியுடன் சேர்த்து மொத்தம் 25 அணிகள் உள்ளன. இந்த அணியில் எல்லாவற்றிலும் விட இளைஞர் அணி வலுவாக முன்னிலையில் உள்ளது. இளைஞர் அணிக்கு இன்னும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களால் ஏராளமான பேர் பயன் அடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவது ஒரு விதத்தில் இந்த சலுகைகளை பயன்களை பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் திட்டங்களால் அவருக்கு மேலும் ஆதரவும் ஆரவாரமும் அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, உடுமலை, பொள்ளாச்சி வந்த போது அவருக்கு வழக்கத்தை விட அதிகமாக ஆதரவும் ஆரவாரமும் ஏற்பட்டுள்ளதை அனைவரும் பார்க்க முடிந்தது. திமுகவின் திட்டங்களினால் மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது . இதனால் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணிக்கு திமுக கூட்டணியை எதிர்க்கும்
சக்தி இல்லை.
கலைஞர் உரிமைத் தொகை பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபோது எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி இப்போது ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு 45 நாட்களில் மகளிர் உரிமைத் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் திமுக வின் திட்டங்களை மக்களிடம் கூறினால் அப்போது தேர்தலுக்காக கூறுவதாக நினைப்பார்கள். எனவே இப்போது இருந்தே இளைஞர் அணியினர் வீடு வீடாக சென்று திமுக அரசின் திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இளைஞர் அணியினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



