ஆத்தூர், ஜுலை 10 –
ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினர்களுக்கு இடையே பூஜை செய்வதில் ஏற்பட்டு வரும் பிரச்சினை சம்பந்தமாக தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சு வார்த்தை கூட்டத்தில் ஒரு தரப்பினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று வெகு சிறப்பாக நடைபெறும் இக்கோவில் திருவிழாவில், அக்கரைப்பட்டி, ஆத்தூர், மல்லையாபுரம், எஸ். பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் அதிக அளவில் சென்று கிடா வெட்டி அலகு குத்தி பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி எடுத்து பூஜை செய்து வழிபட்டு செல்வது வழக்கம்.
திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில் பூஜை செய்வது சம்பந்தமாக ஆத்தூர் மற்றும் அக்கரைப்பட்டி ஆகிய இரு கிராமத்தினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இதன்படி ஆத்தூரை சேர்ந்தவர்கள் விழா கால பூஜை செய்து வந்த நிலையில் இதற்கு அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது ஆத்தூரைச் சேர்ந்தவர்கள் ஒரு மணி நேரம் மட்டும் பூஜை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதன்படி ஆத்தூர் சேர்ந்தவர்கள் அழகு குத்தி காவடி எடுத்து ஊர்வலமாக சென்று பூஜை செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும். ஆடி அமாவாசை திருவிழாவில் அக்கரைப்பட்டி மற்றும் ஆத்தூரை சேர்ந்தவர்களிடையே பூஜை செய்வது சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் அக்கரைப்பட்டி மற்றும் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர்களை அழைத்து சமாதானம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன், செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சின் தீபா, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமாதான கூட்டத்தில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது பூஜை செய்வதற்கு ஆத்தூரை சேர்ந்தவர்களுக்கு ஒரு மணி நேரம் போதாது. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் சமாதான கூட்டத்திலிருந்து ஆத்தூரை சேர்ந்தவர் திடீர் வெளி நடப்பு செய்தனர். தொடர்ந்து அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் சடையாண்டி கோவிலில் பூஜை செய்வது சம்பந்தமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை வரும் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளதால் தீர்ப்பின்படி 15-ம் தேதிக்கு மேல் இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும், வழக்கு தீர்ப்பு தள்ளிப் போனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நடைமுறையை இந்த ஆண்டும் பயன்படுத்தி வழக்கம்போல் திருவிழா நடைபெற அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஒப்பந்தத்தில் அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கையொப்பம் போட்டனர். இதனால், தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.