குளச்சல், ஏப்- 13
மணவாளக்குறிச்சி அருகே சிவந்தமண் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (32) பைக் மெக்கானிக். இவரது மனைவி ராதிகா (27)நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, தற்போது 5, 4 வயதில் மகன் மற்றும் மகள் உள்ளனர். ராதிகா அடிக்கடி அவரது தோழி வீட்டுக்கு சென்று அங்கு இருந்து விட்டு வருவது வழக்கமாம்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி குழந்தைகளுடன் தோழி வீட்டுக்கு சென்றவர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார். பின்னர் தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு செல்வதாக தாயாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் ராதிகா மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை என்ற பகுதியில் உள்ள தனது தங்கை ராஜேஸ்வரி (25) அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் நான்கு பேரும் கிருஷ்ணகுமார் வீட்டிற்கு செல்லவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று விவரமும் தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் உறவினர்கள் மாயமானவர்கள் குறித்து பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதை அடுத்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்த மாயமான நான்கு பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதில் ராதிகாவுடன் மாயமான அவரது தங்கை ராஜேஸ்வரியும் நர்சிங் முடித்து மதுரையில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 26 நாட்கள் மட்டுமே ஆகிறது. அக்கா, தங்கை இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.