குளச்சல், மார்- 13
குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் (34).வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிஷா (28). இந்த தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சகாயராஜன் வெளிநாட்டிலிருந்து மனைவி அபிஷாவை போனில் தொடர்பு கொள்ளும்போது பிசி என தொடர்பு கொள்ள முடிவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த சகாயராஜன் செல்போனில் யாரிடம் பேசுகிறாய்? என கடும் வாக்குவாதம் மனைவியிடம் நடந்துள்ளது. இதனால் அபிஷா பின்னர் கணவரிடம் செல்போனில் பேசுவதில்லை.
இதையடுத்து சகாயராஜன் வெளிநாட்டிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அபிஷாவை காணவில்லை. மனைவியை பல இடங்களிலும் தேடினார். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் பீரோவில் இருந்து 25 பவுன் நகைகளையும் அபிஷா எடுத்துச் சென்றது தெரிய வந்தது. உடனே குளச்சல் போலீஸ் நிலையத்தில் சகாயராஜன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷாவுடன் செல்போனில் பேசியது யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.