மார்த்தாண்டம், நவ. 20 –
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள உலக மீனவர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: இன்று நவம்பர் 21 மீனவர் தினம் என்றதும் “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
கடலுக்கு போகும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் தொழில் செய்கிறார்கள். காற்று, மழை, சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித் தொழில் செய்வதற்கு இந்திய அரசும், இலங்கை அரசும் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் நலிவடைந்து போய்க்கொண்டிருப்பதை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும். நம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் மீன்பிடித் தொழிலின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.எனவே மத்திய அரசு இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசிடம் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், இலங்கையால் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிப்பதற்கும் அல்லது நஷ்டஈடு தருவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.
உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா கடல் உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் மீனவர்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதோடு மீனவர்கள் உரிமைகள் காத்திட உறுதி ஏற்போம். இவ்வாறு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.



