நாகர்கோவில் ஜூன் 2
பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்ட நிலையில் அஞ்சுகிராமம் பேரூராட்சி பொட்டல்குளம் பகுதியில் புதுக்குளத்திற்கு தண்ணீர் வருகின்ற கால்வாய் பணிகள் நடைபெறுவதால், போதிய தண்ணீர் கிடைக்குமா? கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா? இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம், எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல் போன்ற அணைகளிலிருந்து கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய தேவைகளுக்கான நீர்பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 7,900 ஏக்கர் நிலங்களில் பாசனத்திற்கு கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடிக்கு 01-06-2024 முதல் 28-02-2025 வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப மற்றும் நீர் இருப்பு, நீர் வரத்தினை பொறுத்து பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசாணைப் பெறப்பட்ட நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து (01-06-2024) காலை கோதையாறு வடிநில பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் (01-06-2024) பேச்சிப்பாறை அணையில் தற்போது 45.47 அடியும், பெருஞ்சாணி அணையில் 61 அடியும், சிற்றாறு 1 அணையில் 16 அடியும், சிற்றாறு 2 அணையில் 16.11 அடியும் நீர் இருப்பு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற மாவட்டங்களை விட தற்போது மழை அதிகமாக பெய்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்றாலும், தண்ணீர் செல்கின்ற கால்வாய்கள் முறையாக தூர் வாரப்படாததால் கடை வரம்பு நிலங்களுக்கு தண்ணீர் முறையாக சென்று சேர முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத நிலை உள்ளது. கோடை காலத்தில் தூர் வாரும் பணிகளை முறையாக செய்திருந்தால் தண்ணீர் கடை வரம்பு நிலங்களுக்கு சென்றிருக்கும். விவசாய பெருமக்களுக்கு பயன் கிடைத்திருக்கும். குறிப்பாக தோவாளை ஒன்றியத்தில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய தூர் வாரும் பணிகளை சம்மந்தப்பட்ட துறை செய்யாமல் மழை தொடங்கும் காலத்தில் செய்ய முயற்சிக்கும் போது மழை வந்து விடுவதால் இப்பணிகளை தொடரமுடியவில்லை. இதனால் தண்ணீர் கால்வாய்களுக்கு வர முடியாத நிலை உள்ளது. விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. அணைகள் எதற்காக கட்டப்பட்டுள்ளது என்றால் தண்ணீர் வீணாகாமல், கடலில் சென்று சேராமல் இருப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும், குடிதண்ணீருக்காகவும் கட்டப்பட்டுள்ளது. முன்பு கட்டப்பட்டுள்ள அணைகளை தவிர தற்போது புதிதாக அணைகள் எதுவும் நமது மாவட்டத்தில் கட்டப்படவில்லை. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிதாக அணைகள் கட்டப்பட வேண்டும். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை ஏற்படுத்த முடியும். புதிய அணைகள் கட்டுவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும். நமது மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய அணைகள் கட்டுவதற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தோவாளை சாணல் விவசாயிகளின் பாசனத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் செல்கின்ற கால்வாய்கள் எதுவும் சீரமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக கன்னிப்பூ பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போதும் பொட்டல்குளம் பகுதியில் புதுக்குளத்திற்கு தண்ணீர் வருகின்ற கால்வாய் பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தோவாளை கால்வாய் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் 10 தினங்களில் இப்பணிகள் நிறைவு பெறும் என துறை அலுவலர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இனி வரும் காலங்களிலாவது கோடை காலத்திலேயே ஆண்டு தோறும் தண்ணீர் வரும் கால்வாய்களில் முறையாக தூர்வாரிட உரிய நடவடிக்கைகளை நீர்வளத்துறை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தண்ணீர் கடை வரம்பு நிலங்களுக்கு செல்லும். துறை அலுவலர்கள் இப்பணிகளை நிறைவேற்றுவதில் ஆண்டு தோறும் கண்ணும் கருத்துமாக இருந்து நிறைவேற்ற வேண்டுமென தமது அறிக்கையில் கூறியுள்ளார்.



