நாகர்கோவில், ஜூலை – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த
பார்வதிபுரத்திலிருந்து கனியாகுளம் ஊருக்கு செல்லும் சாலையின் குறுக்கே தேசிய நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விடும் வேளையில் கனியாங்குளம் மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகம், தபால் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு தொடக்கப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலம்பாறை பண்டாரத் தோப்பு, தேனிக்குளம், உழவர்கோணம், அழகர் கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சாலையை கடப்பதில் பெரும் சிரமத்திற்குள்ளாக வேண்டிய நிலை உருவாகும்.
மேலும் இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் விளைபொருட்களை எடுத்து செல்வதற்கும் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கும் பொன்ஜெஸ்லி, அமிர்தா பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்படும் அவலம் ஏற்படும். மேலும்
பார்வதிபுரத்திலிருந்து இறச்சகுளம் செல்லும் பொது மக்கள் இந்த சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள இரயில்வே பாதையில் கேட் மூடப்படும் பொழுது இதற்கும் நெடுஞ்சாலைக்கும் இடையில் வசித்து வரும் சுமார் 50 குடும்பங்கள் அவசர தேவைக்கு வெளியில் எங்கும் போக முடியாது கைதிகள் போல காணப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, இந்த கன்னியாகுமரி திருவனந்தபுரம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வரும் பொழுது மேற்கூறிய ஊர் மக்களும் பிறப்பகுதி மக்களும் மிகுந்த பாதிப்படைவார்கள். எனவே மக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை இப்பகுதி மக்களும், பொது மக்களும் கடந்து செல்ல திட்டம் வகுக்குமாறும் மேலும்
வேப்பமூடு சிறுவர் பூங்காவை சீர் அமைக்க கோரியும் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ், துணைத் தலைவர் ஆறுமுகம்,செயலாளர், பிரபு, இணைச்செயலாளர் சொக்கலிங்கம்,செய்தி தொடர்பாளர் நாகராஜ், மேற்கு தொகுதி தலைவர் ஜான், செயலாளர் ஜோஸ் , இணைச் செயலாளர் ஷாஜி , பொருளாளர் ஜெய்கர் சிங், தெற்கு தொகுதி செயலாளர் விஜிலன், செய்தி தொடர்பாளர் ஜெனித், ஸ்ரீ ரங்கநாதன், கிங்ஸ்லி, கலையரசு, மெலிக்கன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.